தமிழக முதல்வர் நெருக்கடிக்கு ஆளாகாமல் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் – பேராசிரியர் இ. பாலகுருசாமி

0
3

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மசோதாக்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

தமிழக சட்டப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பத்து பல்கலைக்கழக சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் இசைவு தெரிவிக்க வகை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய உயர்கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல். ஆனால், இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம், உயர்கல்வியின் தரம் ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். இத் தீர்ப்பின்படி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அரசே நியமிக்கலாம். அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால், பதவி நீக்கமும் செய்யலாம். இதுவரை இந்த அதிகாரங்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடமே இருந்தன. இப்போதும் ஆளுநரே வேந்தராக நீடிக்கிறார். ஆனால், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநருக்கு துணைவேந்தர் நியமனத்தில் எந்த உரிமையும் இல்லை என்ற விநோதமான நிலை உருவாகியிருக்கிறது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை வேந்தராக இருக்கும் ஆளுநரே நியமிக்கும் நடைமுறை நாடு முழுவதும் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்நடைமுறை அரசியல் குறுக்கீடுகளால் நேரும் ஆபத்தைத் தடுப்பதற்காக அமைந்தது. இந்நிலையில், காலம்காலமாக ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட முறையை திடீரென்று மாற்றவேண்டிய அவசரம் என்ன? இந்த மாற்றம் உயர்கல்வியில் சுநாமியைப் போல் தாக்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படும். இது, மாநிலத்தின் உயர்கல்வியில் அனைத்து அம்சங்களையும் முழுமையாகச் சிதைத்துவிடும். இந்த விளைவுகளையெல்லாம் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லையோ என நினைக்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை, அரசு நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளை ஆளுநர் நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை மட்டும் கவனத்தில் கொண்டிருக்கக் கூடும்.

துணைவேந்தர்களை யார் நியமிக்கிறார்கள் என்பது உண்மையிலேயே முக்கியமானது அல்ல. ஒருவர் பெயர்பெற்றவராக, நேர்மையானவராக, அனுபவம் உள்ளவராக, தலைமைப் பண்புள்ளவராக, தகுதியானவராக இருந்தால், அவரைத் துணைவேந்தராக நியமிப்பது ஏற்புடையது. உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பின் நியமனத்தில் எந்த நடைமுறையைப் பின்பற்றினாலும், அரசியல் குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும். அதன் மூலம் ஊழல், உற்றார், உறவினருக்கு ஆதாயம் செய்தல், சலுகை காட்டுதல் ஆகியவை தடுக்கப்பட வேண்டும். துணைவேந்தர் நியமனங்களில் கடந்த காலங்களில் இருந்தது போல் ஊழல், உற்றார், உறவினருக்கு ஆதாயம் செய்தல், சலுகை காட்டுதல் ஆகியவை அமைந்துவிட்டால், தமிழகத்தின் பல்கலைக்கழகங்களின்

சுதந்திரம், நேர்மை ஆகியவை பெருமளவுக்கு சிதைந்துவிடும்.  இது, ஏற்கெனவே, மோசமான நிலையில் இருக்கின்ற உயர்கல்வியின் தரத்தையும் ஆராய்ச்சியின் தரத்தையும் சீர்குலைக்கும்.

கடந்தகால நிகழ்வுகள்

பல்கலைக்கழக நியமனங்களில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவது, ஊழல் ஆகியவை 2006ம் ஆண்டில் தொடங்கின. பன்வாரிலால் புரோஹித் ஆளுநராகப் பொறுப்பு ஏற்கும் வரையில் (2017ம் ஆண்டுவரை) இந்நிலை நீடித்தது. அப்போது நான்கு வகையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

  • அரசியல் தலைவர்களின் உறவினர்கள்
  • ஆளும் கட்சிகளின் தீவிர விசுவாசிகள் அல்லது தீவிர உறுப்பினர்கள்
  • பிரதான சாதிகளைச் சேர்ந்தவர்கள் (இது வாக்கு வங்கி அரசியலுக்காக..)
  • அதிக பணம் கொடுப்பவர்கள்

சில நிகழ்வுகளில், விரிவுரையாளர்களாகவும், துணைப் பேராசிரியர்களாகவும் இருந்தாலும் அரசியல் தலைவர்களின் மருமகன்கள், மருமகள்கள், சகோதரிகள், நெருங்கிய உறவினர்கள் என்பதால் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரின் நேர்முக உதவியாளர், துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் கூட துணவேந்தர்களாக நியமிக்கப்பட்ட விநோதமும் நடந்திருக்கிறது.

இதைவிட அதிர்ச்சியானது, தங்கம் கடத்திய வழக்கில் திஹார் சிறையில் இரு ஆண்டுகள் இருந்தவர் கூட துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான்! இவையெல்லாம் ஆளுநர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு முந்தைய அரசாங்கங்கள் செய்த சம்பவங்கள் ஆகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி. பொது வாழ்வில் நீண்ட அனுபவம் மிக்க தமிழக முதலமைச்சர் எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் துணைவேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் தகுதியான, நேர்மையான, ஊழல் கறைபடியாத, திறமையானவர்களையே நியமிக்க வேண்டும். அதுதான் தமிழகத்தில் உயர்கல்வி சிறப்பிடம் பெறுவதற்குப் பெரும் துணையாக அமையும்.

பேராசிரியர் இ. பாலகுருசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here