கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டகை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் மாவட்டமே உருக்குலைந்திருக்கிறது. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் வீடுகள் பல அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த பலரும் தற்போது மண்ணுக்குள் புதைந்துக் கிடக்கிறார்கள்.
தற்போது வரை 50 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்துடன் தேடி வருகின்றனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேரம் செல்லச் செல்ல நிலச்சரிவின் பாதிப்பு வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பல இடங்களில் இருந்தும் மீட்பு குழுவினர் வயநாட்டிற்கு விரைந்து வருகின்றனர். மின் துண்டிப்பு, கனமழை மற்றும் கடுமையான பனி மூட்டம் நிலவி வரும் நிலையில், மீட்பு பணிகளை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், ” ஒரே இரவில் 300 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையைத் தாங்க முடியாமல் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. காயம்பட்டவர்களை உயிருடன் காப்பாற்ற முன்னுரிமை அளித்து வருகிறோம். தோண்டத் தோண்ட மனித உடல்கள் கிடக்கிறது. மொத்த பகுதியும் உருக்குலைந்து காணப்படுகிறது.
பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் வெள்ளத்தைக் கடந்து மக்களை மீட்க சிரமம் ஏற்பட்டு வருகிறது. மதிப்பிட முடியாத அளவிற்கு பேரிடர் ஏற்பட்டிருக்கிறது. அனைத்து பகுதிகளில் இருந்தும் உதவிகள் வந்துக் கொண்டிருக்கிறது.” என்றார்.