வாக்குசீட்டை பயன்படுத்தி தேர்தலை சந்திக்கும் பழைய முறையை மீண்டும் அமல் படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவை தள்ளுபடி செய்து அறிவுரைவழங்கியுள்ளது நீதிமன்றம்.
மேலும் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் 100% சரிபார்க்கவேண்டும் என்று கோரப்பட்ட மனுவையும் நிராகரித்த நீதிபதிகள் “தேர்தல் நடைமுறைகள்மீது சந்தேகம் வேண்டாம் ” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் நீல நிற பட்டனை அழுத்தியதும் ஓட்டு பதிவாகிறது. எந்த வேட்பாளருக்கு பதிவானது என்பதை கண்ணாடி பெட்டிக்குள் தெரியும் சீட்டில் பார்க்கலாம். அதன் பெயர் ஒப்புகை சீட்டு.
ஓட்டு எண்ணும் போது தொகுதிக்கு ஐந்து சாவடிகளை தேர்வு செய்து, அங்கு பதிவான ஓட்டுகள் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
ஐந்து சாவடிகளில் சரி பார்த்தால் போதாது; அனைத்து ஓட்டுகளையும் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு உறுதி செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு இருக்கிறது; ஆகவே, முன்பு இருந்ததை போல ஓட்டு சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வழக்குகள் தொடரப்பட்டது.
இதுகுறித்து நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் விசாரித்து நேற்று(26-04-2024) தீர்ப்பளித்தனர். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- மின்னணு ஓட்டு பதிவு வந்த பின், ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இது மக்களின் நம்பிக்கையை உணர்த்துகிறது.
- ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என்று, தேர்தல் கமிஷன் வைத்த அறிவியல் தொழில்நுட்ப ரீதியிலான வாதங்கள் ஏற்கத் தக்கவை
- மீண்டும் ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது தொழில்நுட்ப முன்னேற்றத்தை நிராகரிப்பதாகும்
- ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிடும் கடினமான பணியை தேர்தல் கமிஷன் மீது சுமத்துவது முட்டாள்தனமானது.
- ஓட்டு சரியாக பதிவாகி உள்ளதா என்பது ‘விவிபாட்’ திரையில் ஏழு வினாடிகளுக்கு ஒளிர்கிறது. இதன் வாயிலாக, வாக்காளரின் அறியும் உரிமை நிறைவேற்றப்படுகிறது.
இந்த காரணங்களால், மூன்று மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. எனினும், கீழ்க்காணும் ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்:
- ஓட்டு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, 45 நாட்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஓட்டு பதிவில் குளறுபடி என எந்த வேட்பாளராவது சந்தேகித்தால், இயந்திரத்தை சரிபார்க்க ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அவர் முன்னிலையில் இயந்திரங்களை சோதனை செய்ய வேண்டும். அதற்கு ஆகும் செலவை வேட்பாளரே செலுத்த வேண்டும். இயந்திரம் தவறாக செயல்பட்டது நிரூபணம் ஆனால், அவர் செலுத்திய கட்டணத்தை திரும்ப தரவேண்டும்
- தோல்வி அடைந்த வேட்பாளர் கோரிக்கை விடுத்தால், ஓட்டு இயந்திரத்தின் மைக்ரோ கன்ட்ரோலரை ஆய்வு செய்ய, பொறியாளர்களை அனுமதிக்க வேண்டும்
- ஓட்டு இயந்திரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன், ‘பார் கோடு’ அமைப்பது குறித்தும், ஒப்புகை சீட்டுகளை இயந்திரம் வாயிலாக எண்ண முடியுமா என்பதையும் தேர்தல் கமிஷன் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.