கோவை,நெல்லை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் – தமிழக தேர்தல் ஆணையம்.!

0
350

கோவை,நெல்லை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த 3 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2 மேயர்கள் மீதும் வந்த புகார்களின் அடிப்படையில் கட்சி தலைமை வற்புறுத்தியதால், அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது

தனது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கோவை மேயர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கல்பனா தெரிவித்திருந்தார். குடும்பச் சூழல் காரணமாக நெல்லை மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக பி.எம்.சரவணன் கடிதம் அளித்திருந்தார்.

இந்நிலையில், நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி, மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மேலும், ஆணையத்திற்கு ஏற்கனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல்கள் நடத்துவதற்கான கூட்டங்களை நடத்தி அப்பதவியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here