ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத வெடிகுண்டு வெடித்தது.

0
209

ஜப்பானில் அமெரிக்காவால் இரண்டாம் உலகப் போரின் போது புதைக்கப்பட்டிருந்த வெடிக்காத வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்ததில் மியாசாகி விமான நிலையத்தின், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின், தென் மேற்கு பகுதியில் மியாசாகி விமான நிலையம் உள்ளது. 1943ல், இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் கடற்படை தளமாக இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட நுாற்றுக்கணக்கான டன் வெடிகுண்டுகள், ஜப்பானை சுற்றி புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில், கட்டுமானப் பணிகளின் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

அமெரிக்க ராணுவம் வீசிய வெடிக்காத குண்டுகள், மியாசாகி விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்ததில், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதனால், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது. ‘வெடிகுண்டு வெடித்த போது அருகில் எந்த விமானங்களும் இல்லை. மேலும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ‘இந்த சம்பவத்தால், 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here