சாலை விபத்தில் பா.ஜ.க நிர்வாகி உயிரிழப்பு: உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,
கோவை, செல்வபுரம் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் நரேஷ் குமார் வயது 30. கோவை மாநகர், மாவட்ட பா.ஜ.க இளைஞரணி செயலாளர். இவர் நேற்று (25.04.2024) இரவு மாதம்பட்டி – சிறுவாணி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நரேஷ் குமார் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் இன்று (26.04.2024) அதிகாலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காயத்துடன் தப்பினார். இந்த விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கோவை மாவட்ட பா.ஜ.க இளைஞரணி செயலாளர் மறைவிற்கு பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல் ஏ., இரங்கல் தெரிவித்து. அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது முகநூல் பக்கத்தில், கோவை மாவட்ட பா.ஜ.க இளைஞரணி செயலாளர், தெற்கு தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர் நரேஷ்குமார் விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம்சாந்தி என்று பதிவிட்டு உள்ளார்.