ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவர் அவர் இடத்தை பாஜக நிரப்பிவருகிறது – அண்ணாமலை

0
433

”தமிழகத்தின் மிகசிறந்த ஹிந்துத்வா தலைவராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். அவருடைய இடத்தை பா.ஜ., நிரப்பி வருகிறது,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவர். ஹிந்து மதத்துக்கு அவர் நேரடியாக ஆதரவு தெரிவித்து வந்தார்.

ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் பா.ஜ., இருந்தாலும், ஹிந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்து வந்தது. ஹிந்து மதத்தின் வளர்ச்சிக்காக அவர் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு, வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மதமாற்ற தடுப்புச் சட்டத்தையும் அமல்படுத்தினார். தன் சம்பளத்தை கோவில்களுக்கு நன்கொடையாக அளித்தது, கோவில் நகரமான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார்.

கோவில்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டார். கோவில்களுக்கு யானைகள் நன்கொடையாக அளித்தார். இதையெல்லாம் வைத்து அவருடைய ஹிந்து மதப் பற்றை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அவருடைய மறைவுக்குப் பின், அ.தி.மு.க., அந்தக் கொள்கையை கைவிட்டு விட்டது. அதனால், தமிழகத்தில் உள்ள ஹிந்துத்வா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ., நிரப்பி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பா.ஜ.,வை ஆதரிக்கின்றனர்.

இவ்வாறு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here