இந்தியாவில் 1950 முதல் 2015 காலக்கட்டத்தில் இந்துக்களின் மக்கள் தொகை என்பது 8 சதவீதம் வரை குறைந்துள்ளது எனவும், முஸ்லிம்களின் மக்கள்தொகை 43 சதவீதம் வரையும், கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை என்பது 5.38 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், 1950 மற்றும் 2015ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பெரும்பான்மையினரான ஹிந்து மக்கள் தொகை 7.8 சதவீதம் குறைந்து, 78.06 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் மக்கள் தொகை 43.15 சதவீதம் அதிகரித்து, 14.09 சதவீதமாக உள்ளது. கிறிஸ்துவர்கள் மக்கள்தொகை 5.4 சதவீதம் உயர்ந்து, 2.36 சதவீதமாக உள்ளது.
சீக்கியரின் மக்கள் தொகை 1.85 சதவீதம், புத்த மதத்தினரின் எண்ணிக்கை 0.81 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஜைனர்களின் எண்ணிக்கை 0.36 சதவீதம் மற்றும் பார்சி எண்ணிக்கை 0.004 சதவீதம் குறைந்துஉள்ளது. இந்த கணக்கெடுப்பு, எவ்வாறு மக்கள் தொகை உயர்ந்தது என்பதை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படவில்லை. அதே நேரத்தில், சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா என்பதை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.
இந்தியாவின் இந்த மக்கள் தொகை விபரங்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் சுமுகமான சூழ்நிலை நிலவுவதையே காட்டுகிறது. சிறுபான்மையினருக்கு சிறப்பான சூழல் நிலவுகிறது என்பதையும் இது காட்டுகிறது. அதனால் தான், அண்டை நாடுகளில் இருந்து, இந்த காலகட்டத்தில் சிறுபான்மையினர் அதிகளவில் நம் நாட்டுக்குள் வந்துள்ளனர்.
நம் அண்டை நாடுகளில் பெரும்பான்மையினர் எண்ணிக்கை, இதே காலகட்டத்தில் உயர்ந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடுகளில் அவர்களுடைய மக்கள் தொகை உயர்ந்துள்ளது. மாலத்தீவுகள் மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக அல்லாத ஐந்து நாடுகளில், இலங்கை, பூட்டானில் மட்டும் பெரும்பான்மையின சமூகத்தினரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பொதுவெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாறாக, இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதுடன், வளர்ச்சியும் அடைந்து வருகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளில், அங்குள்ள பெரும்பான்மையினர் எண்ணிக்கையே உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். உலக அளவில் பெரும்பான்மையினர் மக்கள் தொகை, 22 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதுபோல ஒவ்வொரு கண்டத்திலும் இதே சூழ்நிலை நிலவுகிறது. பெரும்பான்மையின மக்கள் தொகை உயர்வு மிகவும் அதிகமாக உள்ள 20 நாடுகளை பார்க்கும்போது, அவை, முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன.
அதேபோல், பெரும்பான்மையின மக்கள் தொகை அதிகமாக குறைந்துள்ள, 20 நாடுகளில் மூன்று மட்டுமே முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.