நாடக நடிகராக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத சக்தியாக மாறிய எம்.ஜி ராமசந்திரன், மக்களால் புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். அண்ணாதுரையின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்து அக்கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
அண்ணாதுரையின் மறைவிற்கு பிறகு கருணாநிதியுடனான கருத்துவேறுபாடுகரணமாக திமுகவிலிருந்து விலகினார். பின்னர் 1972 அக்டோபர் 17-ம் தேதி அதிமுக என்ற கட்சியை தொடங்கினார் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய பின் அதிமுக சந்தித்த முதல் தேர்தலே இடைத்தேர்தல் தான். கட்சி தொடங்கிய ஆறு மாதத்தில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் அப்போது மாயத்தேவர் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
அதை தெடர்ந்து 1977-ல் நடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது அதிமுக. அந்த கூட்டணி ஒட்டுமொத்தமாக, 34 இடங்களைக் கைப்பற்றியது. அதில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 17 இடங்களில் வெற்றி பெற்றது.
அதன் பின் 1980-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தது. அதிமுக, ஜனதா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. அந்த தேத்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதிமுக சிவகாசி மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் என இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
1984 தேர்தலில் கூட்டணி அப்படியே மாறிப்போனது, அதிமுக காங்கிரஸ் கூட்டணி உருவானது. அப்போது தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 37 இடங்களைக் கைப்பற்றியது அதிமுக கூட்டணி. அதிமுக மட்டும் 12 இடங்களில் போட்டியிட்டு 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த எம்ஜிஆர் 1987 ஆம் ஆண்டு உயிரிழந்தார். எம்ஜிஆர் மறைந்த நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்ற பிளவு நேரிட்டது. இதனால், அதிமுக ஆட்சியின் பெருமான்மை குறைந்தது. ஜானகி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாகவும், ஜானகி தலைமையில் இன்னொரு அணியாகவும் அதிமுக தேர்தல் களத்தில் இருந்தது. எனவே வாக்குகள் பிரிந்ததால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. ஜெயலலிதா தலைமையிலான அணி 22.2% வாக்குகளை மட்டும் பெற்று 27 இடங்களை வென்றது. ஜானகி அணி 9.2 % வாக்குகளைப் பெற்று 2 இடங்களைப் பெற்றது.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை பிளவு பட்டிருந்த அதிமுக ஒன்றிணைந்து எதிர்கொண்டது. இதனால், 17.12 % வாக்குகளைப் பெற்று 11 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்ததற்கு பின்னர் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 44.4% வாக்குகளைப் பெற்று 164 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா ஒருமுறை, ராஜிவ் காந்தி சிந்திய ரத்தத்தால் அதிமுக வெற்றி பெறவில்லை என்று ஒரு கருத்தை வெளியிட்டார். இது காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார் உள்ளிட்டோரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி அலை வீசியதால் 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 21.47 % வாக்குகளை மட்டும் பெற்று 4 இடங்களில் மட்டுமே ஜெயலலிதாவால் வெற்றி பெற முடிந்தது.
1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 25.89 % வாக்குகளைப் பெற்று 18 தொகுதிகளில் வெற்றி பெற்று தமது அரசியல் எதிரிகளை ஜெயலலிதா வியக்க வைத்தார். தம்மால் தோல்விக்கு பின்னரும் மீண்டு எழ முடியும் என்பதை கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் எடுத்துக் காட்டினார்.
வாஜ்பாய் தலைமையிலான மத்திய ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது. எனவே ஒரு ஆண்டு கழித்து 1999ஆம் ஆண்டில் மீண்டும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக 25.68% வாக்குகள் பெற்று 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த முறைகளைப் போல மோசமாக அதிமுக தோற்கவில்லை.
தம்மை விமர்சித்த மூப்பனாரை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ஜெயலலிதா தயங்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் உடல் நலக்குறைவாக வீட்டில் ஓய்வில் இருந்த மூப்பனாரை, நேரில் சென்று ஜெயலலிதா சந்தித்தார். இது போன்ற அவரது அரசியல் உத்திகள் 2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் 31.4% வாக்குகளை அதிமுக பெற்று 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனால், அதே நேரத்தில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
1998ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை கவிழ்த்த ஜெயலலிதா 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க தயங்கவில்லை. எனினும் அவர் தோல்வியை தழுவினார். ஜெயலலிதாவுக்கு எதிரான அலை ஏதும் வீசவில்லை எனினும் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை.
2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதிமுக, பாமக, இடது சாரி கட்சிகளுடன் கூட்டணி வியூகம் அமைத்த ஜெயலலிதா 23 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் உடன் கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெற்றது.
2014 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசியது. தமிழ்நாட்டில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. மோடியா, லேடியா என்று ஜெயலலிதா பரப்புரைகளில் அதிரடி கேள்வி எழுப்பினார். 39 தொகுதிகளில் போட்டியிட்டு 44.92% வாக்குகளைப் பெற்று 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் ஆளுமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, கூட்டணி பலம் ஏதும் இன்றி 136 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் கருத்துக் கணிப்புகளை எல்லாம் மீறி ஜெயலலிதா தமது செல்வாக்கின் மூலம் 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். எம்ஜிஆர் மட்டுமே தொடர்ச்சியாக இரண்டு முறை முதலமைச்சராக இருந்தார் என்ற சாதனையை ஜெயலலிதா முறியடித்தார். இதற்கு அவரது ஆளுமையும், அவரது அரசியல் தந்திரமும் காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உடல் நலக்குறைவால் அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். மீண்டும் தமிழக அரசியலில் அதிமுக அரசியல் ரீதியான பின்னடவை எதிர்கொண்டுள்ளது. முதலில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். பின்னர் சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் போர்கொடி தூக்கினார். அதே சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. எனவே எதிர்பாராத விதமாக சசிகலாவின் ஆதரவுடன் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவிக்கு வந்தார்.
சசிகலா சிறை சென்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்ட நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் அப்போதைய சபாநாயகர் தனபால், இதனால், 2019ஆம் ஆண்டு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைக்கு வைக்கப்பட்ட பரிட்சையாகவே பார்க்கப்பட்டது. அந்த பரிட்சையில் அவர் போதுமான அளவு வெற்றி பெறவில்லை.
இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் தோல்வி ஆகியவற்றால் அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை என்ற அதிருப்தி அதிகரித்தது. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 66 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 34 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இவையெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற ஆளுமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், ஆளும் கூட்டணியின் அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் வாக்குவங்கி 10 சதவீதம் குறைந்திருக்கிறது என்பதையும் எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். 2019, 2021, 2024 ஆகிய தேர்தல்களில் 46 % அளவுக்கு அதிமுக வாக்குவங்கியை இழந்திருக்கிறது. மீண்டும் வாக்குவங்கியை கட்டமைப்பதில் உள்ள சவால்களை எடப்பாடி பழனிசாமி உணர்ந்திருப்பதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போல தமிழ்நாடு முழுமைக்குமான ஒரு தலைவர் அதிமுகவில் இல்லை என்ற குறைபாடு இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை என்றே இந்த தேர்தல்கள் காட்டுகிறது. இப்படி குறைகளுடன் பயணிக்கும் அதிமுக 53 ஆவது ஆண்டை கொண்டாடும் இந்த தருணத்திலாவது மீளுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.