ஹிந்து சாம்ராஜ்யம் கண்ட சத்ரபதி சிவாஜி

0
3

ஹிந்து அடக்கு முறையின் உச்ச கட்டம் – ஔரங்கசீப்

பொது ஆண்டு 1618ல், குஜராத்தில் பிறந்தான் ஒளரங்கசீப்.  தன்னுடைய பதினைந்து வயதிலேயே மதம் கொண்ட யானையை ஈட்டியால் குத்தி அடக்கி, ஷாஜகானிடம் பகதூர் (வீரன்) என்கிற பட்டத்தையும், இரண்டு லட்சம் ரூபாய் பெருமானமுள்ள பரிசுகளையும் பெற்றான். தன்னுடைய பதினாறாம் வயதில் பத்தாயிரம் குதிரைகளை கொண்ட ஒரு படையை வழி நடத்தி சென்று, ‘புந்தேல்கண்ட்’ பகுதிகளில் கிளர்ச்சிகளை அடக்கினான். தன்னுடைய பதினெட்டாம் வயதில் டெக்கானுக்கு தலைவனாக ஷாஜகானால் அவன் நியமிக்கப்பட்டான். பலமுறை முயன்று ஷாஜகானால் பிடிக்க முடியாத அகமது நகரின் ‘நிஜாம் ஷாஹி வம்சத்தை, ஒளரங்கசீப் முடிவுக்கு கொண்டு வந்தான்.

பதவி வெறி

ஷாஜகான் தனது மூத்த மகன் ‘தாராஷூகோ’-தான் தன் வாரிசாக வர வேண்டும் என விரும்பினான். தாராஷூகோ மிகச்சிறந்த அறிவாளி மற்றும் அக்பர் வழியில் மதசகிப்புத் தன்மை கொண்டவன். ஒளரங்கசிபோ சிறு வயதிலிருந்தே மதவெறி பிடித்த ஹனாஃபி கொள்கையில் பிடித்தத்துடன் இருந்தான். ஷாஜகானுக்குப் பிறகு யார் என்பதில் மேலும் இரண்டு சகோதரர்களான முராத் மற்றும் ஷூஜாவுடன் சேர்த்து நான்கு பேருக்குள் பலத்த போட்டி எழுந்தது. மற்ற மூன்று பேரையும் கொன்று விட்டு, 1659ல் ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். அதோடு நில்லாமல் தந்தை ஷாஜகானையும் சிறையிலடைத்தான். எட்டு ஆண்டுகளுக்குப் பின் 1666ல் ஷாஜகானும் மரணம் அடைந்தான்.

மத வெறி

ஔரங்கசீப் தன் ஆட்சியில், பல இஸ்லாமிய தீவிரவாத ‘ஹனாஃபி’ கொள்கைகளை, ‘ஃபதவா இ அலம்கிரி’ என்ற பெயரில் அமல்படுத்தினான். குடிப்பது, சூதாடுவது போன்றவற்றை அவன் தடை செய்தது மட்டுமே அவன் செய்த நல்லவைகள். ஆனால் இசை நாட்டியம், கலை போன்ற பலவற்றையும் தடை செய்தான். அவனுடைய மதவெறி கோரதாண்டவம் ஆடத் தொடங்கியது. பாரதமெங்கும் ஹிந்துக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளானார்கள்.

முகலாய சாம்ராஜ்யத்தின் வளர்ச்சி

ஒளரங்கசீப் மிகப் பெரிய ராணுவத்தை உண்டாக்கி தன் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே சென்றான். வடமேற்கு பஞ்சாப் பகுதிகளைப் பிடித்தான். பொது ஆண்டு 1657ல் அவன் பீஜப்பூர் சுல்தான்கள் மீது படையெடுத்தான்.  பீதாரை பிடித்தான். பொது ஆண்டு 1663ல், ‘லதாக் பகுதிகள் மீது நேரடி ஆளுமையை அவன் ஏற்படுத்தினான். பொது ஆண்டு 1664ல், ‘செயிஷ்டகான்’ என்கிற கொடுங்கோலனை வங்காளத்தின் சுபேதாராக நியமித்தான். செயிஷ்டகான் அப்பகுதியில் இருந்த ‘போர்ச்சுகீஸிய’ மற்றும் ‘அர்கனீசிய’ ஆளுமையை தடுத்து நிறுத்தினான். மிகப்பெரும் சக்தி வாய்ந்த அரசுகளாக இருந்த பீஜப்பூரையும், கோல்கொண்டாவையும் கைப்பற்றினான். இப்படி பாரதம் முழுவதும் ஒளரங்கசீபின் ஆளுமை விரிந்து கொண்டே சென்றது. உலக சரித்திரத்தின் மிகப்பெரும் பேரரசுகளில் ஒன்றாக முகலாய பேரரசு விளங்கியது. அவனது படையில் ஏராளமான பீரங்கிகளும், பல லட்சம் காலாட்படையும், மிகப்பெரிய குதிரை படைகளும் இருந்தன. அவனை வெல்ல உலகில் யாருமே இல்லை என்கிற நிலை இருந்தது.

இஸ்லாமிய மயமாக்கம்

அவனது அரசு விரிந்து கொண்டே சென்றது. அத்துடன் இஸ்லாமிய மயமாக்கலும் தொடர்ந்தது. பாரதம் முழுவதையும் இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் எனும் குறிக்கோளில் அவன் கிட்டத்தட்ட வெற்றியடைந்து  விட்டான் என்றுதான் கூற வேண்டும். ஹிந்துக்களை மதமாற்ற பல அடக்கு முறைகளை அவன் பயன்படுத்தினான். ‘சிந்து’, ‘முல்தான்’, ‘வாரணாசி’ பகுதிகளில், பிராமணர்களின் சொற்பொழிவுகளுக்கு பெரும் திரளாக மக்கள் திரண்டு வந்தார்கள். அதில் மதம் மாறிப் போன உள்ளூர் முஸ்லீம்கள் அதிகமாக காணப்பட்டார்கள். இதை அறிந்த ஒளரங்கசீப், தன் சுபேதார்கள் மூலமாக அவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்க வைத்தான். ஹிந்துக்களின் பள்ளிகள், கோவில்களை, ராஜ்ஜியம் முழுதும் தகர்ப்பதற்கு அவன் உத்தரவிட்டான். மேலும் காஃபிர்களை போல் (இஸ்லாமியர் அல்லாதோர்) உடை அணியும் இஸ்லாமியர்களுக்குக் கடும் தண்டனை அளித்தான். மேலும் மதநல்லிணக்கத்துக்கு ஆதரவாக இருந்த இஸ்லாமிய ‘சுஃபி’ துறவிகளை அவன் அழித்தான். அதில் ‘சர்மாத் கஷானி’ என்பவரும் அடக்கம்.

ஹிந்துக்களின் மீது அடக்கு முறை

ஒளரங்கசீபின் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து போராடிய ஒன்பதாவது சீக்கிய துறவியான ‘தேஜ் பகதூருக்கு’ மரண தண்டனை அளிக்கப்பட்டது. ஹிந்துக்கள் மீது கட்டாயமாக ஜிஸியா வரி விதிக்கப்பட்டது. முஸ்லீம் வியாபாரிகள் வெறும் இரண்டரை சதவீத வரியே செலுத்தி வந்த நிலையில், ஹிந்து வியாபாரிகள் ஐந்து சதவீத வரி விதிப்பை செலுத்த வேண்டுமென்று ஔரங்கசீப் ஆணையிட்டான். தன்னுடைய அனைத்து நிர்வாக துறைகளிலுமிருந்தும் ஹிந்துக்களை நீக்கினான். இப்படி மத ரீதியாக ஹிந்துக்களை ஒடுக்கி இஸ்லாமிய மத மாற்றத்தை ஊக்குவித்தான்.

ஹிந்து கோவில்கள் தகர்ப்பு

ஹிந்து கோவில்களை அழிப்பதைத் தன்னுடைய முக்கிய கொள்கையாக கொண்டிருந்தான் ஒளரங்கசீப். அவனுடைய ஆட்சியில் பல நூறு கோவில்கள் தகர்க்கப்பட்டன. சில ஆய்வாளர்கள் அதன் எண்ணிக்கை அறுபதினாயிரம் வரை இருக்கக்கூடும் என்கிறார்கள். அவன் அழித்த கோவில்களின் மிக முக்கியமானதாக, ஹிந்துக்களின் புனித தலங்களான ‘காசி விஸ்வநாதர் ஆலயம்’, ‘சோமநாதர் ஆலயம்’ மற்றும் ‘கிருஷ்ண ஜன்ம பூமி’யான ‘கேசவ தியோ’ ஆலயம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அக்கோவில்களைத் தகர்த்து அவ்விடங்களில் மிகப்பெரும் மசூதிகளை அவன் எழுப்பினான். மேலும் அவன் ‘கண்டேலா’, ‘உதய்பூர்’, ‘சித்தூர்’, ‘ஜோத்பூர்’ என பல பகுதிகளில் இருந்த முக்கியமான கோவில்களை அழித்தான்.

மற்றொரு புறம் அவன் ஹிந்துக்களின் ஆதரவைப் பெற, “உஜ்ஜைன்’, ‘அசாம்’, மற்றும் ‘சித்ரகோட்’ பகுதிகளில் சில கோவில்களை கட்ட உதவியுள்ளதாக சொல்கிறார்கள். சில போர்களின் போது, அங்கு பெரும்பான்மையாக இருந்த ஹிந்துக்களின் பங்களிப்பைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்திற்காக மட்டுமே இந்த யுக்தியை கையாண்டான் என்கிறார்கள். உதாரணத்திற்கு டெக்கான் பகுதிகளில் போரிடுகையில் அவனுக்கு ஹிந்துக்களின் பங்களிப்பு பெரிதும் அவசியமானது. ஆகையால் இந்த ‘மதநல்லிணக்க’ தந்திரத்தை பயன்படுத்தி, தன் படையில் இருபத்தி இரண்டு சதவீதத்தில் இருந்த ஹிந்துக்களின் சதவீதத்தை, முப்பத்தி ஒன்று சதவீதமாக அவன் உயர்த்தினான்.

ஹிந்துக்களுக்கு விடிவு காலம்

கொடுங்கோலன் ஒளரங்கசீபின் ஆட்சியில் ஹிந்துக்கள், விடிவுகாலம் தோன்றாதா என்று பரிதவித்தனர்.  இனிமேல் நமக்கு வருங்காலமே இல்லை என்று பலர் நினைத்தார்கள். அதர்மத்தை அழிக்க இறைவன் அவதாரம் எடுக்க வேண்டும் என்றால் அதர்மம் உச்ச நிலையை அடைய வேண்டும். காலப் போக்கில் ஹிந்து சமுதாயமே முழுவதுமே அழிக்கப் பட்டுவிடுமோ என்று அச்சப் படும் நிலை நிலவியது. அப்படிப்பட்ட ஒரு உச்ச நிலையைதான் ஒளரங்கசீப் ஆட்சியில் அதர்மம் அடைந்தது. இந்த நிலையில் தான், அந்த அரக்க சக்தியிலிருந்து ஹிந்து சமுதாயத்தைப் பாதுகாக்க, குறிப்பான இரண்டு மகத்தான, வெற்றிகரமான சக்திகள் தோன்றின. ஒன்று மராட்டியத்திலிருந்து. மற்றொன்று பஞ்சாபின் சீக்கியர்களிடமிருந்து.

மராட்டியத்தில் தோன்றிய மாபெரும் எழுச்சி

சுல்தானியரிடம் கூலிப்படையாக மராட்டியர்கள்

வடக்கே டில்லியில் முகலாயர்கள் ஆட்சியின் உச்சகட்டம். தக்காண பகுதியிலோ அகமது நகர், பீஜப்பூர், பீரார், கோல்கொண்டா, பீடார் என்ற ஐந்து சுல்தானியங்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருந்தாலும், ஹிந்துக்களைக் கொடுமைப் படுத்துவதில் ஒருவரை ஒருவர் மிஞ்சினர். 1526ல் இஸ்லாமிய பாமினி பேரரசு சிதறுண்டபோது இவை தோன்றின. 1565ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் ஹிந்துக்களின் காவலனான விஜயநகரப் பேரரசும் பலவீனமாகிப் போனது. இந்த நிலையில் மராட்டிய வீரர்கள் பலர் முகலாயர்கள், மற்றும் பாமினி சுல்தான்களின் படைகளில் ஆளுக்கொரு பக்கம் சேர்ந்து, அவர்களுக்காகச் சண்டையிட்டுத் தங்கள் சொந்த சகோதரர்களையே அழிக்கும் நிலை நிலவியது.

சுதந்திர எண்ணமே நசுக்கப் பட்டது

இதனை உணர்ந்த ஷாஹாஜி என்ற மாவீரர் பூனாவை சுதந்திர நாடாக அறிவித்தார். ஆனால் இந்தச் செய்தி கேட்டு பீஜப்பூர் சுல்தானின் படைகள் வந்து பூனாவை சர்வ நாசம் செய்துவிட்டன. பிரம்மாண்டமான மாளிகைகள் கற்குவியல்களாக மாறின. நகரைச் சுற்றியிருந்த பல கோட்டைகள் தரைமட்டமாயின. நகரம் முழுவதும் தீயிட்டுக் கொழுத்தப் பட்டது. ஒன்றுமறியா மக்களும் கொன்று கொழுத்தப்பட்டனர். “இது போதாது”, கொலைகாரர்களின் ஆத்திரம் அத்துடன் அடங்கவில்லை. “சுதந்திரம் என்ற எண்ணமே அழிக்கப்பட வேண்டும்” என்று அவர்கள் உறுமினர். கழுதை பூட்டிய ஏர் கொண்டு பூனா நகரம் உழப் பட்டது. நகர மத்தியில் ஒரு இரும்புக் கடப்பாரை நடப்பட்டு அதன் மீது பழஞ் செருப்பு மாட்டப்பட்டது. அதன் மேல் ஒரு உடைந்த சிப்பி ஓடு வைக்கப் பட்டது. எங்கும் அழிவின் கொடிய கோலம்! பூனா நகரமே நிர்மூலமாகிக் காட்சியளித்தது.

தோன்றியது விடி வெள்ளி

சுதந்திர சாம்ராஜ்யம் அமைக்க நினைத்த ஷாஹாஜியின் நிலையோ அந்தோ பரிதாபம். மறுபடியும் முகலாயன் ஷாஜஹானிடம் ஐயாயிரம் வீரர் அடங்கிய படை அணி ஒன்றிற்குத் தலைவராகப் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் சிவனேரிக் கோட்டையில் பத்திரமாகத் தங்க வைக்கப் பட்டிருந்த ஷாஹாஜியின் மனைவி ஜீஜாபாயிற்கு ஓர் ஆண்மகன் பிறந்தான். அன்று பிப்ரவரி 19, 1630. அந்த கோட்டையின் அதி தேவதையான சிவையின் பெயரில் “சிவாஜி” எனப் பெயரிட்டார்கள். சிறுவன் சிவாஜியும் அன்னை ஜீஜாபாயிடம் ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டு வீரனாக வளர்ந்து வந்தான். ஷாஹாஜியோ முகலாயரிடமும், சுல்தானியரிடமும் மாறி மாறி அடிமை சேவகம் செய்து வந்தார்.

பீஜப்பூர் சுல்தானால் மயான பூமியாக்கப் பட்ட பூனாவின் கதையை, சிறுவன் சிவாஜிக்குச் சொன்னார் ஜீஜாபாய். 1636ம் ஆண்டு ஜீஜாபாய், சிவாஜி மற்றும் குரு தாதாஜி கொண்டதேவுடன் பூனாவுக்குச் சென்று தங்கினார். தற்போது ஷாஹாஜி பீஜப்பூர் சுல்தானிடமே வேலைக்குச் சேர்ந்திருந்தார்! ஜீஜாபாயும், சிவாஜியும் வந்த பின், படிப்படியாக மக்கள் பூனா நகருக்குத் திரும்பத் துவங்கினார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து தங்கத்தில் ஏர் செய்து, சிறுவன் சிவாஜி கையில் பிடித்து உழ, மக்கள் பயம் நீங்கி தங்கள் நிலங்களை நோக்கிச் சென்றார்கள். பூனாவுக்குப் புது வாழ்வு துவங்கியது.

ஹிந்து ராஜ்யத்துக்கான சபதமேற்பு

தனது தந்தைக்குச் சொந்தமான ஜாகிரின் வனாந்தர மற்றும் மலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்தான் சிறுவன் சிவாஜி. அந்த மாவல் மாவட்டத்தின் கடுமையான நிலப் பரப்பில் வாழ்ந்த மாவலி இன மக்களுடன் நட்புப் பூண்டான். மிகவும் ஏழ்மையான அதே நேரத்தில் நேர்மையான அந்த மக்களிடமிருந்துதான் சிவாஜியின் பிற்கால மாவீரத் தளபதிகள் தோன்றினார்கள். 1642ம் ஆண்டு ஒரு நாள் அதே மலைப் பகுதியில் ராய்ரேஷ்வர் கோவிலில் ஒரு சிறிய படை நின்றிருந்தது. நேதாஜி பால்கர், யேஸாகி கங்க், தானாஜி மலுசுரே, தாதாஜி நரஸி பிரபு குப்தே போன்ற இளைஞர்களும், அனுபவமும் திறமையும் வாய்ந்த தாதாஜி கொண்டதேவ், பாஜி பாஸல்கர், நரஸி பிரபு ஆகியோரும் அங்கே குழுமியிருந்தனர்.

சிவலிங்கத்துக்கு அபிஷேகத்தைத் துவக்கினார் அர்ச்சகர். அப்போது தனது விரல் ஒன்றைக் கீறி, கரத்திலிருந்து வழியும் ரத்தத்தை சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்த சிவாஜி, உறுதி தோய்ந்த குரலில் ஹிந்து ஸ்வராஜ்யத்தை ஸ்தாபிக்க தமது வாழ்வை அர்ப்பணிக்க சபதமேற்றார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் சபதமேற்றனர். சில நிமிடங்களில் ஆலய முற்றத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் காவிக் கொடி கம்பீரமாகப் பறக்க ஆரம்பித்தது. அனைவருக்கும் மூத்தவரான பாஜி பாஸ்கர் முன்னே வந்து சிவாஜியை நோக்கி “எனது அரசருக்கு வணக்கங்கள்” என வணங்கினார். உணர்ச்சிப் பெருக்கில் இருந்த சிவாஜியும் தாதாஜி, பாஜி, நரஸி ஆகிய பெரியோரின் பாதங்களில் பணிந்து வணங்கினார்.

அராபியர், ஆப்கானியர், பட்டாணியர், துருக்கியர் மற்றும் கடைசியாக முகலாயர் என அலை அலையாக அடுத்தடுத்து வந்த இஸ்லாமியப் படையெடுப்புகளை ஹிந்து சமுதாயத்தின் மாபெரும் வீரர்கள் தொடர்ந்து போராடி வந்ததாலேயே ஹிந்து சமுதாயம் இன்றும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. தற்போது அந்த மொத்த இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளையும் எதிர்த்து போரிட்டு, ஹிந்துக்களை விடுதலை செய்யும் மொத்த பொருப்பையும் சிவாஜியின் உருவில் ஹிந்து மராட்டியம் ஏற்றுக் கொண்டது. மன்னனுக்கு மகனாகப் பிறக்கவில்லை சிவாஜி. ஆனால் மாபெரும் ஹிந்து சமுதாயத்தைக் காப்பதற்காக அவரது லட்சியம் “ஹந்தவி ஸ்வராஜ்” அமைப்பதாகும்.

ஸ்வராஜ்யத்தின் துவக்கம்

அன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கே கட்டப் பட்டிருந்த கோட்டைகள்தான் ராஜ்யத்தின் எல்லைகளை உறுதிப் படுத்தின. 1645-ம் ஆண்டு பதினாறே வயதான சிவாஜியின் தலைமையில், தேர்ந்தெடுக்கப் பட்ட மாவ்லா வீரர்களின் அணி “ஹரஹர மஹாதேவ்” என்ற கோஷத்துடன் அதிரடியாகத் தாக்கி முஸ்லீம்களின் கையிலிருந்த ‘தோரணா’ கோட்டையைக் கைப்பற்றியது. இதுவே ஸ்வராஜ்ய அமைப்பின் துவக்கம். தோரணா கோட்டைக்குச் சிறிது தொலைவில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஸ்வராஜ்யத்தி்ன் தலைமைப் பீடமாக ஆக்கத் தீர்மானிக்கப் பட்டது. அதற்கு ராஜகிரி எனப் பொருத்தமாகப் பெயரிடப் பட்டது.

பீஜப்பூரின் அப்ஸல்கான் வதம்

அடுத்தடுத்து பீஜப்பூருக்குச் சொந்தமான பல கோட்டைகளை சிவாஜி கைப்பற்றலானார். கோட்டைகளை ஒரு ஜாகீர்தாரி (குறுநில மன்னன்) கைப்பற்றி வருகின்ற செய்தி பீஜப்பூர் சுல்தானைச் சென்றடைந்தது. அத்துடன் பீஜப்பூரில் பணியில் இருந்த சிவாஜியின் தந்தை ஷாஹாஜியின் மீதும் சுல்தானின் சந்தேகப் பார்வை பட்டு அவர் கைது செய்யப் பட்டார். சிவாஜி டில்லி முகலாய மன்னர் ஷாஜஹானுக்கு எழுதிய ஒரு ராஜதந்திரக் கடிதத்தின் பேரில், டில்லியின் குறுக்கீட்டால் அவர் விடுதலை செய்யப் பட்டார். அடுத்து சிவாஜியைத் தண்டிக்க பீஜப்பூரின் தளபதி உருவத்தில் மாமிச மலைபோலிருந்த அப்ஸல்கான் தலைமையில் மிகப் பெரிய படை அனுப்பப்பட்டது. சிவாஜியை வீரத்தால் வெல்வது கடினமானதால் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என அவனுக்கு அறிவுறுத்தப் பட்டது.

பிரதாப்கர் கோட்டைக்கு அப்ஸல்கானின் தூதுவன் ஒருவன், ஒரு கடிதத்துடன் வந்து மலையடிவாரத்தில் சிவாஜியை பேச்சு வார்த்தைக்கு அழைத்தான். நல்ல ஒரு அரசுக்குத் தேவையான திறமையான ஒற்றர் படையும் சிவாஜியிடம் இருந்தது. அதன் மூலம் அப்ஸல்கானின் ஒவ்வொரு அசைவையும், அவனது நோக்கத்தையும், சிவாஜியைப் பிடித்து செல்ல ஒரு பெரிய இரும்புக் கூண்டினைச் செய்து வந்துள்ளதையும் அறிந்து கொண்டார். சிவாஜியை வம்புக்கு இழுப்பதற்காக துல்ஜா பவானி ஆலயத்தை அவன் அழித்ததையும் சிவாஜி அறிந்து கொண்டார். தூதுவனிடம் சிவாஜி, அப்ஸல்கானைச் சந்திக்கத் தான் அச்சப் படுவதாகவும், பிரதாப்கர் கோட்டை இருந்த மலைச்சாரலில் பாதி உயரத்தில் பொதுவான இடத்தில் ஒரு கூடாரத்தில் தனியாக இருவரும் சந்திக்கலாம் என யோசனை கூறி அனுப்பினார்.

சிவாஜி பயந்துவிட்டார் என்ற செய்தியே அப்ஸல்கானுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. 1659 நவம்பர் 10ம் தேதி கூடாரத்தில் அப்ஸல்கான் தனியே அமர்ந்திருக்க சிவாஜி உள்ளே நுழைந்தார். பிரமாண்டமான உருவம் கொண்டிருந்த அப்ஸல்கான், சிவாஜியின் குறுகிய வடிவத்தை அணைப்பதுபோல் தழுவி, அவரது கழுத்தைத் தன் அக்குளில் இடுக்கிப் பிடித்தான். தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவாஜியின் அடிவயிற்றில் குத்தினான். ஆனால் சிவாஜி கையில் புலிநகமும், ஒரு பிச்சுவா கத்தியும் வைத்திருந்தது பயன்பட்டது. அவனது பிடியிலிருந்து விடுபட்டு அவன் வயிற்றைக் கிழித்துவிட்டார். அதன் பின்னர் மறைந்திருந்த சிவாஜியின் வீரர்கள் வெளிப்பட்டு, எதிர்பாராத தாக்குதல் நடத்தி பீஜப்பூர் படையை பூண்டோடு அழித்துவிட்டனர்.

பீஜப்பூரின் தாக்குதல்கள் அனைத்தும் முறியடிப்பு

சிவாஜியின் படைகள் அடுத்தடுத்த கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டே சென்றன. அதனைத் தடுக்க பீஜப்பூர் சுல்தான் தொடுத்த தாக்குதல்கள் அனைத்தும் சிவாஜியின் படைகளின் வீரத்தாலும், பாஜிப் பிரபு தேஷ்பாண்டே போன்ற மாவீரர்களின் பலிதானத்தாலும், சாமர்த்தியமான யுக்திகளாலும் தகர்க்கப் பட்டன. முழு விபரங்களையும் இங்கு விவரித்தால் கட்டுரைத் தொடர் மிகவும் நீண்டுவிடும். பன்ஹல்கர் கோட்டை முற்றுகை சமயத்தில் பீஜப்பூர் படைகளுக்கு ஆதரவாக வந்த ஆங்கிலேயரின் பீரங்கிகளையும் சிவாஜியின் ஹிந்துப் படைகள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கைப்பற்றப் பட்ட அனைத்து கோட்டைகளிலும் ஹிந்து சாம்ராஜ்யத்தின் காவி நிறக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

வெள்ளையனுக்கு விடுத்த எச்சரிக்கை

வெளிநாட்டிலிருந்து வியாபாரத்துக்காக வந்திருந்த வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனி உள்நாட்டின் அரசாட்சி விவகாரங்களில் தலையிடுவதைக் கண்டு சிவாஜி கோபம் கொண்டார். பரங்கியரின் பாசறைகளில் ஒன்றான ராஜ்பூருக்கு விஜயம் செய்தார் சிவாஜி. வீரர்கள் அறிவித்தபடி மக்கள் தாமே முன் வந்து  ஸ்வராஜ்ய பணிக்காக நன்கொடைகள் அளித்தனர். அடுத்து நகரத்துக்குள் சென்று அனைத்து ஆங்கில அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார் சிவாஜி. கைது செய்யப் பட்ட ஆங்கிலேயர்கள் சிவாஜியின் வசோடா மற்றும் சோன்கர் சிறைச்சாலைகளில் வாடினர். பன்ஹல்கர் கோட்டை முற்றுகையில் ஆங்கிலேய பீரங்கிகளைக் கொண்டு பயன் படுத்தியமைக்காக, ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு கோரினார் சிவாஜி. இறுதியில் 12-2-1663 அன்று சிவாஜி எல்லா ஆங்கிலேயக் கைதிகளையும் விடுவித்தார். நன்றியுடன் வணங்கி நின்ற ஆங்கிலேரிடம் சிவாஜி சொன்ன வார்த்தைகளாவன… “உங்கள் தலைவனிடம் கூறுங்கள், இது எங்கள் பூமி. நாங்கள்தான் அரசாளுகின்றோம். பரங்கியரின் தொழில் வியாபாரம்தான். அதை மட்டும் அவர்கள் கவனிக்கட்டும். வேறு அதிகப் பிரசங்கித்தனம் ஒன்றும் செய்யத் துணிய வேண்டாம். உம். போகலாம்.”

முகலாயரிடமிருந்து ஸ்வராஜ்யத்துக்கு ஆபத்து

பீஜப்பூரின் ஆதில்ஷாவுக்கு சிவாஜியைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையே செத்துவிட்டது. ஆனால் டில்லி முகலாயரின் தளபதி செயிஸ்டகான், சிவாஜியின் புனே அரண்மனையைக் கைப்பற்றி, ஒரு லட்சம் முகலாய வீரர்களுடன் அங்கேயே தங்கிவிட்டான். செயிஸ்டகானின் முரட்டுப் பிடியில் சிக்கி புனே நகர மக்கள் பெருந்துயரத்துக்கு உள்ளானர்கள். ஆனால் சிவாஜியோ, 1663 ஏப்ரல் 5 அன்று, 400 வீரர்களுடன் சென்று, நள்ளிரவில் 200 வீரர்களுடன் கோட்டைக்குள் நுழைந்து, அதிரடித் தாக்குதல் நிகழ்த்தி, செயிஸ்டகானைப் பதற வைத்து விட்டார். படுக்கையறையிலே இருந்த செயிஸ்டகான், சிவாஜியின் வாள் வீச்சால் கை விரல்கள் துண்டிக்கப் பட்டு மனமுடைந்து விட்டான். அவனுடைய ஒரு மகனும் கொல்லப் பட்டான்.

அதிரடித் தாக்குதல் நடத்திய சிவாஜியும், வீரர்களும் இருளில் தப்பி விட்டனர். சுதாரித்துக் கொண்டு துரத்தி வந்த முகலாயர் படையினர், தூரத்தில் இருளில், தயாராக வைக்கப் பட்டு, கொம்புகளில் தீப்பந்தம் கட்டப்பட்டு இருட்டில் துரத்திவிடப் பட்ட மாடுகளின் பின்னால் துரத்திக் கொண்டு சென்றார்கள். பொழுது விடிந்த பின்னரே தாங்கள் ஏமாற்றப் பட்டதை அவர்கள் உணர்ந்தார்கள். அவமானப் பட்ட செயிஸ்டகானை, ஔரங்கசீப் வங்காளத்துக்கு மாற்றிவிட்டான்.

கடலிலும் ஆட்சி செலுத்திய சிவாஜி

துருக்கரும், முகலாயர்களும் தரை வழியே வந்தார்கள். ஆனால் ஐரோப்பியர்களோ கடல் மார்க்கமாக கப்பல்களில் வந்தார்கள். எனவே கடல் வழி ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த கடல்படையை உருவாக்கினார் சிவாஜி. 1674ல், சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்ட நேரத்தில் 57 போர்க் கப்பல்களுடன் 5,000 வீரரகள் கொண்ட கப்பல் படை அவரிடம் இருந்தது. 1664-ல் சிவாஜி சூரத்தின் மீது படையெடுத்துச் சென்றபோது தரைப் படையுடன் கப்பல் படையும் இணைந்து செயல்பட்டது. அத்துடன் கடல் ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு தடுத்து நிறுத்த கடலில் குரேடி தீவில், 1664-ல் 48 ஏக்கரில் கோட்டை ஒன்று கட்டப் பட்டது. பிரும்மாண்டமான சுவர்களுடன் நின்ற, `சிந்து துர்க்` என்றழைக்கப் பட்ட அந்தக் கடல் கோட்டையின் மேல் காவிக் கம்பீரமாகப் பறந்தது.

சிங்கத்தைப் பிடிக்க இன்னொரு சிங்கத்தை அனுப்பிய நரி

1665ன் ஆரம்பத்தில் சிவாஜியின் சிந்து துர்க் கடல் கோட்டையைப் பற்றிக் கேள்விப் பட்ட முகலாயன்  ஔரங்கசீப் “என்ன, சிவாஜியிடம் கப்பல் படையா?” என அசந்து போய்விட்டான். தன் தளபதிகளில் மிகத் திறமை வாய்ந்த மிர்ஜா ராஜா ஜெய்சிங்கை 80,000 வீரர்களுடன் சிவாஜியைப் பிடிக்க அனுப்பி வைத்தான். இந்த மிர்ஜா ராஜா ஜெய்சிங் ராஜபுதனத்தைச் சேர்ந்த பெருவீரன். பக்திமான். தினமும் சிவ பூஜை முடிப்பதற்கு முன்னர் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பருகாதவர். ஆனால் அவர்தான் சிவாஜியால் உருவாகி வரும் ஹிந்து ராஜ்யத்தை, முகலாயர் சார்பில் அழிக்க வந்து கொண்டிருந்தார்.

“முகலாயப்படை புனேயை நெருங்கிவிட்டது… புரந்தர் கோட்டை வீழ்ந்து விட்டத… முகலாயர்கள், பாமர மக்கள் மீதும் செய்யும் பயங்கர கொடுமைகளைத் தாங்கவே முடியவில்லை… ஆண்கள் தூக்கிலிடப்படுகின்றனர்… பெண்கள் மானபங்கம் செய்யப்படுகின்றனர்… ” செய்திகள் வர வர சிவாஜியின் உள்ளம் வேதனையால் துடித்தது. ‘நானே நேரடியாக சண்டையிடட்டுமா? அப்படியானால், நாட்டின் விடுதலை?’

கடைசியில் சிவாஜி ஜெய்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். “நீங்கள் என்னை நசுக்கி தக்காணத்தை வென்று, ஹிந்து இதயங்களைப் பிழிந்து அதிலிருந்து பீறிட்டெழும் குருதியின் விலைகொண்டு புகழ் அடையப் போவதாக அறிகின்றேன். ஆனால் நம் தேசத்திற்கும், நம் தர்மத்திற்கும் அபாயம் உண்டாக்கும் விதம் உங்கள் முகத்திலேயே கரிபூசிக் கொள்கின்றீர்களே! ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால், எவ்வளவு அவலமான புகழ் உங்களை வந்து சூழும் என்பது உங்களுக்குப் புரியும். நீங்கள் உங்கள் பலத்தால் தக்காணத்தை வெல்ல வருவீர்களென்றால், நான் உடனே சரணாகதி அடைகின்றேன். நான் உங்களுடன் என் பெரும் படையையும் இணைத்து, தக்காணத்தின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை வென்று உங்கள் வசமே ஒப்படைத்து விடுகிறேன். ஆனால் நீங்களோ, ஒளரங்கசீப் ஆணையின் பேரில் வந்துள்ளீர்கள். எனவே நான் உங்களிடம் எப்படி நடந்து கொள்வதென்றே தெரியவில்லை…

“நான் நேரடியாக உங்களைச் சந்திக்க வருவது, ஆண்மையாகாது. ஆண்மையுள்ளவன் காற்றடிக்கும் திசையில் ஓடமாட்டான். சிங்கம் என்றும் நரியாகாது. ஆனால் உங்களுடன் நேரடியாக மோதினால், அதன் விளைவாக இரண்டு பக்கமும் ஹிந்துவின் ரத்தமே சிந்தும்.

“துருக்கியர்கள் இந்த சமர் புரிய வந்திருந்தால், அதை நாங்கள் அதை வீரவிளையாட்டாக எடுத்துக் கொண்டிருப்போம். ஆனால் அப்ஸல்கானும், ஷெயிஸ்டகானும் நசுக்கி எறியப்பட்டதைப் பார்த்த அந்த ஒளரங்கசீப்,  உங்களை அல்லவா எங்களுடன் சண்டையிட அனுப்பி விட்டான்! மிக வலிமை வாய்ந்த ஹிந்துவே இவ்வுலகில் இருக்கக் கூடாது என்பதுதான் அவனுடைய வேட்கை போலும். இருக்கும் வீரதீர சிங்கங்களும் ஒன்றை ஒன்று தாங்களே அடித்து வீழ்த்திக் கொள்ள வேண்டுமா? அதன் விளைவாக நரி அல்லவா காட்டின் அரசன் ஆகப் போகின்றது! இந்த சதித்திட்டத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா…!”

இந்தக் கடிதம் பாரத நாட்டு வரலாற்றுக் கடிதங்களில் உயரிய இடம் பெற்றுவிட்டது. ஆனால் ஜெயசிங்கிடமிருந்து பதிலில்லை.

சுயராஜ்யம் எல்லா பக்கங்களிலிருந்தும் கடுமையாக முற்றுகையிடப் பட்டிருந்தது. வேறு உபாயம் இல்லை. சிவாஜி மறுபடியும் கடிதம் எழுதினார். ஜெய்சிங் பிஜப்பூரின் மீது படையெடுத்தால் அதற்கு உதவத் தான் தயாராக இருப்பதாகவும், அப்படி ஒருவேளை ஜெய்சிங் தன்னுடன் சமாதானமாகப் போக மறுத்தால் தானும், தன்னுடைய மராட்டாக்களும், அடில்ஷாவுடன் சேர்ந்துகொண்டு முகலாயப்படைகளுக்கு எதிராகப் போராடுவோம் எனவும் சிவாஜி எழுதிய கடிதத்தைப் படிக்கும் ராஜா ஜெய்சிங், சிவாஜியுடன் சமாதானம் பேச சம்மதம் தெரிவித்தார். ஔரங்கசீப்பிற்கும் தகவல் தெரிவித்தார்.

சமாதானத்தின் ஒரு பகுதியாகத், தான் வென்றெடுத்த அத்தனை பகுதிகளையும் தன்னிடமே விட்டுக் கொடுக்கவேண்டும் எனவும், அத்துடன் தக்காணத்தின் முழுப் பொறுப்பையும் தன்னிடமே ஒப்படைக்கவேண்டும் என்றும் கூறினார், சிவாஜி. ஜெய்சிங் அதனையெல்லாம் ஔரங்கசீப்பிற்குத் தெரிவித்துவிட்டதாகவும், சிவாஜியை ஆக்ராவுக்குச் சென்று ஔரங்கசீப்பிடம் நேரடி அறிமுகம் செய்து கொள்ளவும் வேண்டினார். தனது குடும்பம், மற்றும் படைவீரர்களது மரியாதையைக் காப்பாற்றியே தீரவேண்டிய கட்டாயத்திலிருந்த சிவாஜி, சிறிது தயக்கத்திற்குப் பிறகு அதற்கு ஒப்புக் கொண்டார்.

ஜுன் 12, 1665-ஆம் வருடம், சிவாஜி ஜெய்சிங்கிடம் முறைப்படி சரணடைய ஒப்புக் கொண்டார். அதன்படி, பன்னிரண்டு கோட்டைகளை சிவாஜி வைத்துக் கொள்வதாகவும், தக்காணத்தின் ஆட்சிப்பொறுப்பு அவருக்கு அளிக்கப்படுவதாகவும், முகலாய அரசவையில் சிவாஜியின் மகனான சாம்பாஜி (8 வயது) மராட்டாக்களின் பிரதிநிதியாக இருப்பார் எனவும், அவருக்கு ஐயாயிரம் குதிரைப்படைகளின் தலைமை அளிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கைவைக்கப்பட்டு, அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது.

ஆக்ராவிற்குப் புறப்படுவதற்குமுன்னர், சிவாஜி தனது முக்கியஸ்தர்களுடன் ராய்காட்டில் ஆலோசனை நடத்தி, பொறுப்புகளைப் பிரித்து ஒப்படைத்தார். தான் திரும்பி வருவதற்கான உறுதி எதுவும் இல்லாத காரணத்தால், நடப்பதனை விதியின் கையில் விட்டுவிட்டு, தன்னுடைய தாயான ஜீஜாபாயிடம் உத்தரவுபெற்று, ஆக்ராவுக்குப் பயணமானார். அதன்படி, மார்ச் 5, 1666 அன்று ராய்கட்டிலிருந்து ஆக்ராவுக்குப் பயணத்தைத் துவக்கினார் சிவாஜி.

நரியின் வலையில் சிக்கிய சிங்கம் – சூழ்ந்துவிட்ட பேராபத்திலி்ருந்து தப்புதல்

தன்னுடைய எட்டு வயது மகன் சம்பாஜியுடன் சிவாஜி ஆக்ரா பயணித்தார். ஆக்ரா அரண்மனையில் அவருக்கு கிடைத்தது அவமானங்களுக்கும் அதிர்ச்சியும் தான். இருவரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டான் ஔரங்கசீப். ஔரங்கசீப்பின் சூழ்ச்சி வலைக்குள் தான் விழுந்ததை உணர்ந்த சிவாஜி அங்கிருந்து தப்பிக்க ஆயத்தமானார். சிவாஜியை கைது செய்த மகிழ்ச்சியில் ஔரங்கசீப் ராஜ்ஜியத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அரண்மனை விழாக்கோலம் பூண்டது. 1666 ஆகஸ்ட் மாதத்தில் அதாவது ஐந்து மாதங்களுக்குப் பின்னர், அரண்மனைக்கு வரும் பழக்கூடையில் ஒன்றில் சிவாஜியும், மற்றொரு கூடையில் சம்பாஜியும் பதுங்கி தப்பி வெளியேறினர். பூனாவில் உள்ள கோட்டைக்கு சிவாஜி திரும்பியதை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர்.

மீண்டும் போர்

சமாதான ஒப்பந்தம் சுமார் நான்கு வருடங்கள், அதாவது 1670 வரை நீடித்தது. மீண்டும் ஔரங்கசீப்  யுத்தத்தை தொடங்கினான். 1669ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அன்று ஔரங்கசீப் “எங்கே ஹிந்து கோவில்கள் தென்பட்டாலும் இடித்துத் தரைமட்டமாக்குங்கள்” என்று கட்டளையிட்டிருந்தான். காசி விஸ்வநாதர் கோவில், மதுராவிலிருந்த கிருஷ்ணர் கோவில், சோமநாதபுரத்தின் சிவாலயம் போன்ற பிரசித்தி பெற்ற ஆலயங்களும் தகர்க்கப் பட்டிருந்தன. இதையெல்லாம் கேள்விப் பட்ட சிவாஜியின் மனதில் எரிமலை குமுறியது. ஸ்வராஜ்யம் முழுவதும் பின்வருமாறு யுத்த பிரகடனம் செய்யப் பட்டது. “டில்லி பாதுஷாவுக்கு எதிராக மீண்டும் சுதந்திர யுத்தம் துவங்கிவிட்டது. எதிரியின் குருதி கொண்டு அன்னை பவானிக்கு அபிஷேகம் செய்விக்கும் வேளை நெருங்கிவிட்டது”.  இம்முறை சிவாஜி, இழந்த பெரும் பகுதிகளை நான்கே மாதங்களில் போரிட்டு மீட்டார். பூனா மற்றும் கொங்கன் பிரதேசங்கள் முழுமையாகத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

 சத்ரபதியாக முடிசூடிய சிவாஜி

சிவாஜி தனது ராஜ்ஜியத்தை முழு ஹிந்து பேரரசாக அறிவித்தார். ஜூன் 6, 1674 அன்று ராய்காட்டில் முடிசூட்டு விழா கோலாகலமாக நடந்தது. வேத மந்திரங்களை முறையாக் அந்தணர்கள் ஓத ‘ஜய் சிவாஜி’ என்ற கோஷம் வானைப் பிளந்தது. சிவாஜியின் காசியிலிருந்து வந்திருந்த காகபட்டர்  நல்ல முகூர்த்த நேரத்தில் பொன்னும் பவழமும் முத்தும் கோர்த்துப் பின்னப்பட்டிருந்த மகுடத்தைச் சிவாஜிக்குச் சூட்டினார். தன்னிகரில்லாத சுதந்திரத் தலைவர்  என்று அவர் சிவாஜியின் புகழை அறிவித்தார்! சுமார் 5௦,௦0௦ பேர் கூடிய நிகழ்வில் மாமன்னர் சிவாஜிக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டன. சத்ரபதி (தலைசிறந்த மன்னர்), சககர்தா (புதிய சாகப்தத்தை உருவாக்கியவர்), சத்ரிய குலவந்தாஸ் (சத்ரியர்களின் தலைவன்), ஹைந்தவ தர்மோதாரக் (ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்துபவர்) என்று பல பட்டங்கள் அளிக்கப்பட்டன.

சிவாஜி அரியணை ஏறியதும் வைரக்கல் பதித்த பொன் தாமரை மலர்களையும், பொன்னாலும் வெள்ளியாலும் செய்த வேறு பல மலர்களையும் அங்கே கூடியிருந்தோரிடையே வாரி வழங்கினார். சமீபத்தில் மணமாகி இருந்த 16 சுமங்கலிகள் அரியணையில் அமர்ந்த மாவீரனுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தார்கள்.

அதில்ஷாவின் பகுதிகளான தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சத்ரபதி சிவாஜியால் 1676ல் கைப்பற்ற பட்டன. பின்பு தமது சகோதரர் வெங்கோஜியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, வெங்கோஜி ஆண்டு வந்த தஞ்சாவூர் மற்றும் மைசூர் பகுதிகளுடன் அவைகளை இணைத்தார். தக்காண பகுதிகள் முழுவதும் மொகலாயர்களையும், சுல்தான்களையும் விரட்டி ஹிந்து ஸ்வராஜ்யம்  அமைய வேண்டும் என்கிற சிவாஜியின் லட்சியம் நிறைவேறியது.

ஆட்சி முறை

சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் மன்னனுக்கு ஆலோசனை கூற, எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். பிறகு அரசை மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது. இராணுவப் படை, குதிரைப்படை, கடற்படை என அனைத்திலும் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு, மன்னரின் நேரடி கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது என கூறலாம்.

தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முகலாய மன்னர்களுடன் செய்த போர் தந்திரங்களும், ஆட்சியைப் பறைசாற்ற அவர் கட்டிய கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன

சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள், இறுதியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு, 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார்.

தீர்க்க தரிசனம்

1680-ல் சிவாஜியின் காலத்தில் மொத்த பாரத நிலப்பரப்பில், ஹிந்தவி ஸ்வராஜ்யமானது பூனா முதல் செஞ்சி வரை 3% இருந்தது. அது நீளவாக்கில் பூனா முதல் தமிழகத்தின் செஞ்சி வரை இருந்தது. இது வளர்ந்து 1740ல் 30% ஆக ஆனது. பிரிட்டிஷார் இங்கு கால் பதிக்க ஆரம்பித்த காலத்தில், அதாவது 1757-வாக்கில் வங்கமும், ஹைதராபாத்தும் தவிர மீதி பாரதம் முழுவதும் ஹிந்துக்களின் நேரடி அல்லது மறைமுகஆளுகையில் இருந்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரனாய் வந்து, மராட்டியருக்கு எதிராக பல போர்களில் கலந்து கொண்டு, பின்னர் வரலாற்று ஆராய்ச்சியாளனாய் மாறிய ஜேம்ஸ் க்ராண்ட் டஃப், பின் வருமாறு கூறுகிறார். “முகமதியர்களின் சிம்மாசனத்தை முழுமையாக சிதறடித்து விட்ட சுதேச ஆட்சியாளர்கள்தான், ஆங்கிலேயருக்கு முன் இந்த தேசத்தை ஆண்டவர்கள். சிவாஜிக்குப் பின்னர் படிப்படியாக வளர்ந்த ஹிந்து சக்தி, வங்காளம் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியைத் தவிர முழு தேசத்தையும் மீட்டுவிட்டது. அந்த சுதேச ஹிந்து சக்தியிடமிருந்துதான் ஆங்கிலேயர்களாகிய நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்” என்று ‘மராட்டியரின் வரலாறு’ என்ற தனது நூலில், க்ராண்ட் டஃப் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

சத்ரபதி சிவாஜி வழியில் அமெரிக்காவை வென்ற வியட்நாம்

சத்ரபதி சிவாஜி மஹாராஜா  வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தைத் தன் சிறு படையினால் கதி கலங்க அடித்தார். இதற்கான காரணம் அவரது புதிய முறையிலான போர் உத்திகள் தாம்! சிறிய தொகுதிகளாக உள்ள படைவீரர்களைக் கொண்ட படைப்பிரிவுகளைக் கொண்டு அவர் நடத்திய தாக்குதல்  முறைக்கு கொரில்லா தாக்குதல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஔரங்கசீப்பின் மாபெரும் படை அலறியது. ஒரு பெரும் வெற்றியைப் பெற்ற சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிப் புகழ் பெற்றார்.

வியட்நாமில் பலம் பொருந்திய அமெரிக்க ராணுவம் நவீன சாதனங்களுடன் வியட்நாமியர்களைத் தாக்கிய போது ஹோசிமின்னுக்கு சற்று திகைப்பாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இதே போன்று வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தின் படைகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற சிவாஜி மஹராஜின் போர்த் தந்திர முறைகள் ஹோசிமின்னின் கவனத்திற்கு வந்தது. அதே முறைகளை அவர் பின்பற்றவே அமெரிக்க ராணுவம் அதிர்ந்து போனது. சுமார் இருபது ஆண்டுகள் நடை பெற்ற போரில் கடைசியாக அமெரிக்கா பின் வாங்கியது. 1975ஆம் ஆண்டு வியட்நாம் வெற்றி பெற்றது.

தனக்கு இந்த வெற்றியை வாங்கித் தந்தது மாவீரன் சிவாஜியே என்று  ஹோசிமின் நம்பினார். ஆகவே அவரை கௌரவிக்கும் வண்ணம் ஹோசிமின் மாவீரனுக்கு குதிரை மீது அமர்ந்த நிலையிலிருக்கும் சிலையை ஹோசிமின் நகரில் நிறுவினார். இன்று அந்த சிலை நிறுவியிருக்கும் இடம் ஹோசிமின் நகருக்கு வருகை புரியும் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகத் திகழ்கிறது. வியட்நாமிய மக்கள் வெற்றியைப் பெற தங்களுக்கு வழி காட்டிய வீர சிவாஜியைப் பெரிதும் போற்றுகின்றனர்.

வட வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி மேடம் பின் (Madame Binh) 1977ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்த ஜகஜீவன் ராம் அவரை வரவேற்றார். வெளிநாட்டு மந்திரிகள் விஜயம் புரியும் இடமாக இருக்கும் ராஜ் காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு அவரை அழைத்துச் சென்றார். பின்னர் குதுப்மினார், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்கள் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் அவருக்கு எடுத்துரைக்க அவரோ தனக்குப் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஒன்று இருக்கிறது என்று கூறினார். ‘சத்ரபதி சிவாஜி மஹராஜின் சமாதி எங்கு உள்ளது, அங்கு செல்ல வேண்டும்’, என்றார் அவர்.

சத்ரபதி சிவாஜி மஹராஜின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டுமென்ற தனது விருப்பத்தை இந்திய அரசுக்கு அவர் தெரிவித்த போது அதிகாரிகளுக்குச் சற்று வியப்பு ஏற்பட்டது. சிலையின் உயரத்திற்கு அவரைக் கொண்டு செல்ல ஒரு கிரேன் வேண்டும். மற்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமே!

ஏன் வீர சிவாஜிக்கு அவர் மாலை அணிவிக்க விரும்புகிறார் என்று கேட்ட போது அவர் அமெரிக்கர்களுக்கு எதிரான தங்கள் போரில், வியட்நாம் ராணுவ வீரர்கள், சிவாஜியின் வீர கதையைச் சொல்லி மகிழ்வது வழக்கம் என்றும், அவரது ராணுவ தளபதிகள் முகலாய சாம்ராஜ்யத்தைக் கதிகலங்க அடித்ததைச் சொல்லி உத்வேகம் பெறுவது வழக்கம் என்றும், அதனாலேயே தாங்கள் வெற்றி பெற முடிந்தது என்றும் விளக்கமாகக் கூறினார். அவரிடம் சிவாஜியின் சமாதி மஹராஷ்டிரத்தில் ராய்கட்டில் உள்ளது என்று  கூறிய அதிகாரிகள் அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.

சமாதியைச் சுற்றி வந்து வணங்கிய அவர் அங்கு கீழே இருந்த மண்ணில் கொஞ்சம் எடுத்துப் பொட்டலத்தில் மடித்து வைத்துக் கொண்டார். அந்த மண்ணைத் தன் தலையிலும் இட்டுக் கொண்டார். வியப்படைந்த நிருபர்கள் அதற்கான காரணத்தைக் கேட்ட போது, மாவீரன் பிறந்த மண் இது; இந்த மண்ணை எங்கள் நாட்டில் தூவினால் அங்கும் இவர் போன்ற  மாவீரர்கள் தோன்றுவார்கள் என்று பதிலளித்தார். மாவீரனான சத்ரபதி சிவாஜிக்கு வியட்நாமின் மிகப் பெரிய நகரமான ஹோ சி மின் நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

சுவாமி விவேகானந்தரின் மனம் கவர்ந்த சத்ரபதி சிவாஜி

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்லும் முன்னர், சென்னையில் சத்ரபதி சிவாஜியின் பெருமை பற்றி டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் ஒரு முறை கேள்வி எழுப்பியபோது, சற்று கோபத்துடனே கூறியதாவது– 

“உங்கள் மீது சிறிதும் பரிவில்லாத, உங்களுடைய பண்பாடு, பாரம்பரியம் மற்றும் பழக்கங்கள் மீது துளியும் மரியாதை கொண்டிராத அன்னியர்கள், தங்களால் புரிந்து கொள்ள இயலாமல் எழுதிவைத்ததை, நமது வரலாறாக நீங்கள் படித்ததால் வந்த விளைவு இது. சிவாஜியைப் போன்ற ஒரு நாயகனை, ஒரு ஞானியை, ஒரு பக்தனை, ஒரு அரசனை நீங்கள் வேறு எங்கும் காண முடியுமா?

இதிகாசங்களில் அடையாளப் படுத்தப் பட்டுள்ள ஒரு லட்சிய மன்னர் அவர். தேசத்தின் உண்மையான உள்ளுணர்வை உணர்த்திய இந்திய நாட்டின் தவப் புதல்வன் அவர். சிதறிக் கிடந்த சிற்றரசுகளை ஒருங்கிணைத்து வருங்கால பாரதத்தின் இறையாண்மைக்கு கட்டியம் கூறியவர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here