கடந்த பத்து ஆண்டுகளில் இளம் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது எனவும் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை என நடிகை ராஷ்மிகா மந்தனா பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியை புகழ்ந்து பேசி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா. இது தொடர்பாக ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர்,”மும்பை – நவிமும்பை இடையே இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான அடல் சேது கடல்வழி பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் இரண்டு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை 20 நிமிடங்களில் கடந்துவிடலாம். இது சாத்தியமாகும் என்று யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாகத்தான் நம்மால் எளிதில் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது நிச்சயம் எனக்கு பெருமை சேர்த்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்டுள்ள வளர்ச்சியை பாருங்கள் இது மிகவும் அற்புதமானதாக இருக்கிறது.
உள்கட்டமைப்பு சார்ந்த திட்டம் அபாரமாக உள்ளது. நவிமும்பையிலிருந்து மும்பை, கோவா முதல் மும்பை, பெங்களூர் முதல் மும்பை வரை என அனைத்து பயணங்களும் மிக எளிதாகவும் அற்புதமான உள்கட்டமைப்புடன் செய்யப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்தவரை இந்தியாவை யாராலும் தடுக்க முடியவில்லை. தற்போது நாட்டின் வளர்ச்சியை பாருங்கள் கடந்த 10 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்து இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
உள்கட்டமைப்பு சாலை திட்டமிடல் எல்லாம் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கிறது. இது நமக்கான நேரம் இந்தியா தான் புத்திசாலி நாடு என நான் சொல்ல விரும்புகிறேன். இளம் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் இப்போது மிகவும் பொறுப்புடன் இருக்கிறார்கள். நாடும் நட்டு மக்களும் மிகவும் பொறுப்புடன் செயல்படுகிறார்கள்” எனக் கூறியிருக்கிறார். தற்போது இந்த செய்தியானது தேசிய ஊடகங்கள் வரை பேசு பொருளாகி இருக்கிறது.