பாஜக அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சியினர் அடிக்கடி வைக்ககூடிய விமர்சனம் ‘அதானிக்காகவே மோடி அரசு செயல்படுகிறது’, ‘அம்பானிக்காகவே பா.ஜ.க அரசு செயல்படுகிறது’ என்பதாகும். எதிர்க் கட்சிகளின் இந்த விமர்சனங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் பொறுமையாக இருந்த பிரதமர் மோடி, இப்போது தேர்தல் சமயத்தில் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துவருகிறார். அந்த வகையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ‘நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்’ என்று பிரதமர் மோடி ஆவேசப்பட்டார்.
தொடர்ந்து சில கருத்துக்களை கூறிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை தொழிலதிபர் டாடா, பிர்லா ஆகியோருக்கு ஆதரவானவர் என்று முன்னர் நாடாளுமன்றத்தில் விமர்சித்தார்கள். இப்போது அம்பானி, அதானி ஆகியோருக்கு ஆதரவானவர் என்று என்னை நேரு குடும்பம் குற்றம் சாட்டுகிறது.
நம் தேசத்துக்கு வளம் சேர்க்கக்கூடிய தொழிலதிபர்களை தொழிலாளர்கள் போலவே மதிக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலாளர்கள் குறித்து சம அளவில் அக்கறை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பணம், நிர்வாக திறன் படைத்தவர்களின் மூளை, தொழிலாளர்களின் கடினமான உழைப்பு என அனைத்தும் அவசியம்’ என்றார்.
மேலும், “சுதந்திர தின நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்களையும், சாதனையாளர்களையும் அழைத்திருந்தேன். சாதனையாளர்களை கௌரவிக்காமல் எப்படி இருக்க முடியும்? அவ்வாறு செய்யாவிட்டால் விஞ்ஞானிகளை எப்படி உருவாக்க முடியும்?” என்றார் மோடி.
சுதந்திர இந்தியாவில், மத்தியில் ஆட்சிசெய்த அனைவருமே நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் சுமூகமான உறவில்தான் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில், 1950-களிலும், 1960-களிலும் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களாக இருந்த டாடா, பிர்லா ஆகியோருடன் அன்றைய பிரதமர் நேரு சுமூகமாக உறவைப் பேணியிருக்கிறார். அதுபோலவே, இன்றைக்கு இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களாக இருக்கும் அதானி, அம்பானி ஆகியோரிடம் பிரதமர் மோடி நெருக்கம் காட்டுகிறார். அதில் என்ன தவறு?
ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “ரஃபேல் விவகாரத்தை எழுப்பினால், போஃபோர்ஸ் பாவங்களை அது அடித்துச்சென்றுவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு மனரீதியிலான ஒரு பிரச்னை” என்று கூறியிருக்கிறார்.
மேலும், “என் நாட்டில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என் நாட்டின் பெருமைக்குரியவை இல்லையா? என் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் உலகில் கடைகளை ஏன் வைத்திருக்கக்கூடாது? உலகம் முழுவதுமிருந்து மக்கள் ஏன் என் நாட்டுக்கு வரக்கூடாது? நீங்கள் எதற்காக வெட்கப்படுகிறீர்கள்?” என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை நோக்கி கேள்விகளை வீசுகிறார் பிரதமர் மோடி.