சநாதன தர்மம் குறித்து அவதூறு பேசியது தொடர்பான வழக்கில், அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு செப். 2-ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சநாதன ஒழிப்பு மாநாட்டில், சநாதனத்தை டெங்கு மலேரியா போன்று ஒழிக்க வேண்டும் என அமைச்சா் உதயநிதி பேசியிருந்தார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் உள்ள ஹிந்து மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் உதயநிதியின் சநாதன நிந்தனை குறித்த பேச்சுக்கு எதிராக பரமேஷ் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி இன்று(ஜூன் 25) ஆஜரானார்.
இந்த நிலையில், இவ்வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ரூ. 1 லட்சம் பிணைத்தொகையுடன் பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கின் விசாரணையை ஆக. 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.