கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும், ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா 2024’ சனிக்கிழமை (ஜூன் 29) தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937இல் இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது பூதாகரமான பிரச்னையாக மாறிய நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் கொண்டுவந்தது.
சட்டத் திருத்தத்தின்படி, கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். படிப்படியாக முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சட்ட மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அம்மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இச்சட்டம் அமலுக்கு வருகிறது.