வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில், தமிழக அரசு சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி பிப்., 17ல் துவங்கியது.
பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்ரல் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சர்வதேச மையத்தில் செய்யப்படவுள்ள 16 வகையான வசதிகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.